காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்

* 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

சென்னை: காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய 150 சவரன் நகையை செய்யாறு அருகே வயல்வெளி கிணற்று நீரில் பதுக்கி இருப்பதாக குற்றவாளி கூறிய தகவலை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நகைகளுடன் பொட்டலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவரின், வீடு தனியார் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் கடந்த 13ம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து 21ம் தேதி வீட்டுக்கு திரும்பியவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், தொழிலதிபர் சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 5.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.  இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்தியமூர்த்தி குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குணா என்ற குற்றவாளியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருடிய நகைகளை பிளாஸ்டிக் கவரில் பொட்டலமாக சுற்றி காஞ்சிபுரம் கலவை சாலையில் வெம்பாக்கம் தாலுகா திருப்பனமூர் சேலரி இடையில் வெங்கட்ராயன் பேட்டை பகுதியில் உள்ள பூபதி என்பவருக்கு சொந்தமான வயல்வெளி கிணற்றில் வீசி சென்றிருப்பதாக கூறினார்.

அதன்பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் முன்னிலையில் செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் நகைகளை தேடினர், ஏதும் கிடைக்கவில்லை.  இதையடுத்து மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை காஞ்சி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் காஞ்சிபுரம் தீயணைப்பு படைவீரர்கள் ராட்சத மோட்டார்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த முழு நீரையும் முழுவதுமாக வெளியேற்றினர். பின்னர் சேற்றில் சிக்க இருந்த பிளாஸ்டிக் பண்டல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்டலை சம்பவ இடத்தில் பிரிக்காமல் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். 7 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு நகை கிடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.