70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது..தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான செந்திலுக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடந்தது.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஸ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிஷேகம் ஆகிய சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் தனக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் செந்திலின் மகன்கள் மணிகண்டபிரபு, மிரிதிபிரபு மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.