புதுடெல்லி: கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால், லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினரான முகமது பைசல் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிஎம் சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 11ம் தேதி, எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும் ,தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
இதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முகமது பைசலை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் ஜனவரி 13ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனவரி 25ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தபோதிலும் முகமது பைசலுக்கு எதிரான தகுதி நீக்கம் திரும்பபெறப்படவில்லை. இதனை தொடர்ந்து முகமது பைசல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்த இருந்த நிலையில், ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெறுவதாக அறிவித்தது.
* தகுதி நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெறாதது குறித்து முகமது பைசல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை செயலகத்தின் அறிவிப்பை பதிவு செய்த நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* 2 மாதம் காத்திருந்தது ஏன்?
தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டது குறித்து முகமது பைசல் கூறுகையில், ‘‘அவர்கள் ஏன் இதனை செய்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கேரள உயர்நீதிமன்றம் எனது தண்டனையை நிறுத்தி வைத்த உடனே அவர்கள் இதனை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இரண்டு மாதங்களாக காத்திருந்தார்கள்? என்னை பிரதிநிதியாக்கிய தொகுதி மக்களுக்கு 60 நாட்களாக குரல் கொடுக்க மறுக்கப்பட்டது. நானும் எது தொகுதி மக்களும் இதனை எப்படி ஈடு செய்யப்போகிறோம் என சபாநாயகருக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அவரது பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்” என்றார்.