நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவர், பல்பீர் சிங். 2020-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியானதும், நெல்லை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பின்னர் சிறிய குற்ற வழக்குகளில் பிடிபடுபவர்களிடம் விசாரணை என்ற பெயரில் பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன், ஏ.எஸ்.பி பல்பீர் சிங், 30 பேர் வரை பற்களைப் பிடுங்கியதாக புகார் தெரிவித்தார். சிலரின் புகைப்படங்களையும் வெளியிட்டார். அதில் அயன் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் படமும் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து வழக்கறிஞர் மகாராஜன் பேசுகையில், “அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, சில தினங்களுக்கு முன்பு குடித்துவிட்டு, ஊரிலிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களை உடைத்திருக்கிறார். அதற்காக அவரைப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியபோது, வாய்க்குள் கற்களைப் போட்டு ஏ.எஸ்.பி பல்பீர் சிங் அடித்ததுடன், பற்களைப் பிடுங்கியிருக்கிறார். சிசிடிவி அமைக்க 45,000 ரூபாய் பணமும் வாங்கியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
ஏ.எஸ்.பி பல்பீர் சிங்மீதான புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனிடையே இந்த விவகாரம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில், ஏ.எஸ்.பி பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் நடத்தும் விசாரணையில் ஆஜராகி யார் வேண்டுமானாலும் தகவல் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், பல் பிடுங்கியதாக தெரியவந்திருக்கும் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்துக்குட்பட்ட லட்சுமி சுந்தர், வெங்கடேஷ், சுபாஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்தச் சூழலில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படாத அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா தாமாகவே இன்று விசாரணைக்கு ஆஜரானார். சப்-கலெக்டர் விசாரணையின்போது தான் கீழே விழுந்து பல் உடைந்ததாகக் கூறியதாகத் தெரிகிறது. அதனால் அவர் கூறுவது உண்மைதானா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப சப்-கலெக்டர் உத்தரவிட்டார். பரிசோதனைக்காக சூர்யா சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செலலப்படார்.
அரசு மருத்துவமனையில் சூர்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது பல் பிடுங்கப்பட்டிருக்கிறதா அல்லது கீழே விழுந்ததில் தற்செயலாக உடைந்திருக்கின்றனவா என்பதை பரிசோதித்தனர். பின்னர் அது குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து சப்-கலெக்டரிடம் கொடுத்துனர். அந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதனிடையே, செய்தியாளர்களிடன் பேசிய சூர்யா, “நானாகவே கீழே விழுந்ததில் என் பல் உடைந்து விட்டது. என் பல் உடைந்ததற்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது” என்று தெரிவித்தார். அவர் விசாரணை முடிந்து வெளியே வந்ததும் அவரை அழைத்துச் செல்ல வந்த காரில் ஏறிச் சென்றுவிட்டார். ஏ.எஸ்.பி பல்பீர் சிங்கால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் தாங்களாகவே விசாரணை அதிகாரியிடம் ஆஜராகி சாட்சியம் அளிக்கவிருப்பதாக தகவல் பரவி வருவதால் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது.