புதுடில்லி :கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 1,337 கோடி ரூபாய் அபராதத் தொகையை உறுதி செய்து, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, ஆண்ட்ராய்டு மொபைல் போன் சாதனங்கள் விற்பனைச் சந்தையில் விதிகளை மீறி செயல்பட்ட கூகுள் நிறுவனத்திற்கு, சி.சி.ஐ., எனப்படும் இந்திய போட்டி ஆணையம் 1,337 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், விதிகளை மீறிய பல்வேறு இணைய தள செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
சி.சி.ஐ.,யின் உத்தரவை எதிர்த்து கூகுள், தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்
முறையீட்டு மனுவை விசாரித்த இரு உறுப்பினர் அடங்கிய அமர்வு, கூகுளின் மனுவினை நிராகரித்ததுடன்,
சி.சி.ஐ., விதித்த அபராதத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிட்டது.
மேலும், சி.சி.ஐ., விதித்த உத்தரவில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி அசோக் பூஷன் மற்றும் உறுப்பினர் அலோக் ஸ்ரீவத்சவா அமர்வு சில மாற்றங்களை செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மேல்முறையீட்டுக்கான வாய்ப்பை வழங்கியதற்காக தீர்ப்பாயத்துக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தீர்ப்பாயத்தின் உத்தரவை மதிப்பாய்வு செய்து, அடுத்தகட்ட சட்ட வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க உள்ளோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.