சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் படுகொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
மேலும், அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய பல்பீர் சிங் ஐபிஎஸ் அதிகாரி குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கிமுத்து, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதில்,”அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
முன்விரோதம் காரணமாக…
அவரது மனைவி சுமலதா கொடுத்த புகார் அடிப்படையில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் கொலையான இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொதுவெளியில் வைத்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய கணேசன், வெங்கடேசன், அருண்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களின் ஒருவர் இளைஞ்சிறார். கொலை செய்யப்பட்ட இளங்கோ போதைப் பொருளுக்கு எதிராக இருந்ததாக விசாரணையில் இதுவரை தெரியவில்லை. புலன் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில், சட்டம் – ஒழுங்கு தொடர்பான கவனஈர்ப்பிற்கு அளித்த பதிலுரை. pic.twitter.com/fmyQYV3BpS
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 29, 2023
பணி இடைநீக்கம்
அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் விவகாரத்தை பொருத்தவரை, குற்றச்செயலில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரியான பல்பீர் சிங் உதவி காவல் கண்காணிப்பாளர் உடனடியாக காத்திரிப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசு எந்த வித சமரசமும் மேற்கொள்ளாது என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளார் என தெரிவித்துக் கொள்கிறேன்.
முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் நடைபெற்ற உடனேயே அரசு எடுத்த விரிவான நடவடிக்கையாகும்.
சுதந்திரமாக செயல்படும் காவல்துறை
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜாதி மோதல்களில் ரவுடிகளால் நடைபெற்ற குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், அதாவது கடந்த அதிமுக ஆட்சியில் 1670 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில் 1596 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தடுக்கப்பட்டிருக்கிறது, காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு விரைவாக செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்த வித பாரபட்சமும் அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என எனது விளக்கத்தை பதிவு செய்கிறேன்” என்றார்.