லட்சத்தீவு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முஹம்மது ஃபைசல். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, இவருக்கும் லட்சத்தீவு முன்னாள் எம்.பி-யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம் சைதின் மருமகன் முஹம்மது சாலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது எம்.பி முஹம்மது ஃபைசலும், அவரின் சகோதரர்களும் முஹம்மது சாலே-வை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

இதில் படுகாயமடைந்த முஹம்மது சாலே விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முஹம்மது ஃபைசல், அவரின் சகோதரர்கள் உட்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைசல் குற்றவாளி என லட்சத்தீவு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்து, பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கியது. இதையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜனவரி 13-ம் தேதி அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், முஹம்மது ஃபைசல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஜனவரி 25-ம் தேதி அந்த தீர்ப்புக்கு தடை விதித்தது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும் லட்சத்தீவு எ.பி-யாக பைசல் தன் பணியை தொடர்கிறார்.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், முகமது ஃபைசல் விவகாரம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. அதோடு இந்திய தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன், வயநாடு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கு தேர்தலை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.