புதுடெல்லி: சட்ட நடவடிக்கை மூலம், நாடாளுமன்றத்தில் ராகுலை விரைவில் எம்.பி.யாக பார்க்க முடியும் என நம்புகிறோம்’’ என முன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் நீதிமன்ற தீர்ப்பால், எம்.பி பதவியிலிருந்து ராகுல் தகுதி இழப்பு செய்யப்ட்டது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நேற்று முன்தினம் கூடி ராகுல் தகுதி இழப்பு விஷயம் குறித்து ஆலோசித்தனர்.
இந்நிலையில் முன்னாள் சட்டஅமைச்சரும், காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சல்மான் குர்ஷித் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியல் முறையை சுத்தப்படுத்துவதற்காக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு குறித்த சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.
ஆனால், அதில் விரும்பத்தகாத பரிமாணங்கள் உள்ளன. ராகுல் காந்திக்கு ஏற்பட்டது அதில் ஒன்று. மக்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றத்துக்கு வெளியே பேச்சு சுதந்திரம் எந்த அளவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தற்போது கேள்வியாக உள்ளது. அது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
ராகுலின் தகுதி இழப்பில் உணர்வுபூர்வமான விஷயம் உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற காரணத்துக்காகத்தான் தகுதி இழப்பு செய்யப்பட்டார். ராகுல் தகுதி இழப்பு விஷயத்தில், பாஜக., வை தோற்கடிக்கும் வரை நாங்கள் இந்த போராட்டத்தில் இருந்து ஓயமாட்டோம். காங்கிரஸை விட்டு விலகியிருந்த திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி போன்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் ராகுல் தகுதி இழப்பு விஷயத்தில் ஆதரவை தெரிவித்திருப்பது எங்களுக்கு ஊக்கமளிப்பதுபோல் உள்ளது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகுதி இழப்பு பிரச்சினை அனைவருக்குமானது. இந்த புதிய பிரச்சினையால் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இது நல்ல விஷயம். நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு நல்ல அறிகுறியாக தெரிகிறது. இது விரிவடைய வேண்டும்.
ராகுல் தகுதி இழப்பு விஷயம் குறித்து இன்னும் சில நாட்களில் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம். விரைவில், அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவோம். சட்ட நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் ராகுலை எம்.பி.யாக பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.