தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களில் சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 2வது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை உயர்நீதி மன்றம் அறிவித்தது.
இதன்காரணமாக இரு தேர்தல் அதிகாரிகளும் ஒப்புக்கொள்ளும் வகையிலான தேர்தல் தேதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டியது இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்கவில்லை. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினரும், செயலாளர் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள்.