திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சிறுவர் எழுச்சி மன்றம் சார்பாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு தேவையான பொருட்களை வழங்கி தேர்வை அச்சமின்றி எழுத அறிவுரை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் இளைஞர்களால் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறுவர் எழுச்சி மன்றம் தொடங்கப்பட்டது. இம்மன்றம் சிறுவர் சிறுமிகளுக்கு அறிவை வளர்ப்பதற்கு கவிதைப் போட்டி , கட்டுரை போட்டி, ஓவிய போட்டி , விளையாட்டுப் போட்டி வைத்து பல மாணவர்களை தங்களுடைய தனித்திறமைகளை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கின்ற சமூக மாற்றத்திற்கான வேலையை செய்து வருகிறது.
பெரியகளக்காட்டூர் அரசு ஆதி திராவிர் நல உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு 2011ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான எழுது பொருட்களைக் கொடுத்து நல்ல அறிவுரைகளை கூறி வழங்கி வருகின்றன. (2019 மற்றும் 2020 ஆண்டுகளில் கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
அதன் அடிப்படையில் தற்பொழுது 2023-ம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற 19 மாணவ , மாணவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்வு எழுத தேவையான பொருட்களை வழங்கி தேர்வை பயமின்றி எதிர்கொள்வதற்கு சிறுவர் எழுச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும், அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி கோ.பிரவீன் குமார் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கற்பகம் , ஆசிரியர் சாந்தி லட்சுமி, கலையரசி, பெரிய களக்காட்டுர் ஊராட்சி மன்ற செயலாளர் கோமதி , வார்டு உறுப்பினர்கள் ராஜ்குமார் ( எ) ரஜினி ஜெரினா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி, சர்வதேச சிலம்பம் வீரர் தங்கமகள் காயத்ரி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அலிஷா, ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு தேர்வை பயமின்றி எழுத நல்ல அறிவுரைகளை கூறி தேவையான பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது நூலகப் பணியாளர் பிரசாந்தன் , கல்லூரி மாணவர் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.