புதுடெல்லி: நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஏழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், அதிக வாக்குகளாக திமுக எம்.பி. திருச்சி சிவா 42, அதிமுக எம்.பி. தம்பிதுரை 16 வாக்குகள் பெற்று உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இவற்றில் நிதிக்கான மூன்று குழுக்களாக பொதுக் கணக்கு குழு, மதிப்பீடு குழு மற்றும் பொதுத்துறைகளுக்கானக் குழு இடம் பெற்றுள்ளன.
இந்த மூன்றில் எம்.பி.க்கள் இடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பொதுக் கணக்கு குழு கருதப்படுகிறது. இதன் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் அமர்த்தப்படுவது வழக்கம்.தற்போது, காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சவுத்ரி தலைவராக உள்ள குழுவிற்கு, இரண்டு அவைகளின் எம்.பி.,க்களும் உறுப்பினர்களாக இருப்பர்.
பெரும்பாலும் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வாகி வந்தனர். எனினும், சமீப காலமாக இந்த ஒப்புதலுக்கு சில கட்சிகள் தயாராக இல்லை என்பதால், உறுப்பினர்களுக்கானத் தேர்தல் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.
இந்த தேர்தலில் மக்களவை எம்.பி.,க்கள் தேர்விற்கு அந்த அவையின் உறுப்பினர்களும், மாநிலங்களவை எம்.பி.,க்கு அதன் உறுப்பினர்களும் வாக்களிப்பது வழக்கம். இவற்றில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்விற்கானத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
மொத்தம் 8 பேர் போட்டியிட்டதில், மிக அதிகமாக திமுகவின் மூத்த எம்.பி.,யான திருச்சி சிவாவிற்கு 42 வாக்குகள் கிடைத்தன. ஆளும் கட்சியான பாஜகவின் எம்.பி. சுதான்ஷு திரிவேதி 34, காங்கிரஸின் சக்திசிங் கோஹில் ஆகியோர் 31 வாக்குகள் பெற்றுள்ளனர்.
பாஜகவில் தேர்வான மேலும் இரண்டு எம்.பி.,க்களில் டாக்டர்.லஷ்மண் மற்றும் கன்ஷியாம் திவாரி ஆகியோருக்கு தலா 29 வாக்குகள் கிடைத்தன. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,யான சுகேந்து சேகர் ராய் 17 மற்றும் அதிமுக எம்.பி.,யான எம்.தம்பிதுரைக்கு 16 வாக்குகள் கிடைத்துள்ளன. இவர்களில் டாக்டர்.தம்பிதுரை கடந்த ஆட்சியில் மக்களவை துணை சபாநாயகராக இருந்தவர். ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.,யான ராகவ் சட்டா வெறும் 2 வாக்குகளுடன் தேர்வாகவில்லை.
மத்திய அரசின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து சரிபார்க்க, சிஏஜி எனும் காம்ப்ட்ரோலர் ஆப் ஆடிட்டிங் என்ற அமைப்பு உள்ளது. இந்த சிஏஜியையும் ஆராயும் உயரியக் குழுவாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு செயல்படுகிறது.
இதன் காரணமாகவே இக்குழுவில் இடம்பெற எம்.பி.,க்கள் இடையே போட்டி அதிகமாகி வருகிறது. இக்குழுவின் பதவிக் காலமும் ஒரு வருடம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.