நெல்லை மாவட்டத்தில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் தோணித்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சின்ன ராஜா (36), என்பவர் நேற்று வீட்டில் இருந்து அருகே உள்ள ஆற்றுக்கு குளிப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது செல்போனில் பேசியபடியே சென்றபோது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே சின்ன ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சின்னராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.