நெல்லை மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள், கல்லூரி பேருந்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்பு அங்கிருந்து சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே டிவிஎஸ் நகர், நான்கு வழி சாலையில் கல்லூரி பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.