புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று தெரியவந்துள்ளது.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவியது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் இறந்தனர். கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகுகரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு புதிய வகை கரோனா வைரஸான எக்ஸ்பிபி1.16 என்ற திரிபுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
எக்ஸ்பிபி வைரஸ் என்பதுஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ் களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந் துள்ளது. நாட்டில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்பரவி வருகிறது என்று மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதித்து வருகிறது.
எக்ஸ்பிபி 1.16 வைரஸ் வேகமாக பரவக் கூடியதாக இருகிறது. இதையடுத்து நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை எக்ஸ்பிபி1 வகை வைரஸால் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வகை வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,573 பேர் பாதிப்பு: நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுமத்திய சுகாதாரத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,981-ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 4.47 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று மட்டும் கேரளாவில் 4 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,30,841 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,41,65,703 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.