புதுடெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு 5வது முறையாக வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இதற்கான கால அவகாசம் 4 முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பான் – ஆதார் இலவசமாக இணைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 1ம் தேதி முதல் அபராதம் ரூ.1000 ஆக்கப்பட்டது. ரூ.1000 அபராதத்துடன் பான் – ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், 5வது முறையாக இந்த காலக்கெடு மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 30ம் தேதி வரை ரூ.1000 அபராதத்துடன் பான் – ஆதார் எண்ணை இணைக்கலாம் என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் எண் செயலிழந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 51 கோடிக்கும் அதிகமானோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைந்துள்ளனர்.