புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்கள் பேசி முடித்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா பதிலளித்து பேசியதாவது: “பல்வேறு தொழில் நிலைகளில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மாற்றியமைப்பதற்கான கோப்புகளுக்கு சட்டத் துறை மற்றும் நிதித் துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று ஆலோசனைக் குழுவின் ஏற்புடன் விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகளை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். பாட்கோ நிறுவனத்தால் ஏற்கனவே பெறப்பட்ட கடன் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் கடன் வழங்கப்படும்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதிகளை பூர்த்தி செய்யாத வகையில் உள்ளனர். இது குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் வழங்க தேர்வுக்குழு கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. காரைக்கால் மாவட்ட தொழிலாளர் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் விரைவில் சரிசெய்யப்பட்டு இயக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு அனைத்து வழித் தடங்களிலும் தடையின்றி இயக்கப்படும். அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதிகளிலும் மாலை நேர ஆங்கில பயிற்சி வகுப்பு (Spoken English) வகுப்புகள் தொடங்கப்படும்.
பயனாளிகள் தங்களின் விண்ணப்பங்களின் நிலை, துறையின் திட்டங்கள் சார்ந்த சந்தேகங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள பதிவு வசதியுடன் கூடிய ஒரு கட்டணமில்லா தொலைபேசி சேவை அமைக்கப்படும்.
பட்டிலியனத்தவர் சிறப்புக் கூறு நிதி செலவினத்தை கண்காணிக்கவும், திட்டங்களை விரைந்து முடிக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.
பழங்குடியின மக்களுக்கு மனைப் பட்டாக்கள் வழங்கி அதில் அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் கல்வி மற்றும் தொழிற் கடன்கள் வழங்கப்படும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் காத்திட அவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் உதவித் தொகையுடன் கூடிய கைவினை தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும்.
பட்டியலின மற்றும் பழங்குடியின கர்ப்பிணி பெண்களுக்கு துறை சார்பில் வளையலணி விழா நடத்துவதற்காக “காரைக்கால் அம்மையார் வளைகாப்பு திட்டம்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தங்கள் மூலம் கூடுதல் வழித் தடங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்படும். அரசு பேருந்துகளில் நேஷனல் காமன் மொபைலிட்ட கார்டு (National Common Mobility Card) வழங்கப்பட்டு தானியங்கி பயணக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். இயக்கப்படாமல் உள்ள மற்றும் சரண்டர் செய்யப்பட்ட பழைய பர்மிட்டுகளை மீண்டும் புதிய நபர்களுக்கு வழங்குவது தொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும்.
தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் புதுச்சேரி திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முதன்முறையாக முழுவதும் மாநில நிதியின் கீழ் “முதல்வர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
வளர்ந்து வரும் இளம்தலைமுறையின் தொழில்நுட்பம் சார்ந்த கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக, கலாச்சார மாற்றத்தினை உருவாக்கும் சிறந்த குறும்படங்கள், புகைப்படங்கள் , யூ-டியூப் படைப்புகள் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதிற்குட்பட்ட படைப்பாளிகளுக்கு “இளம் நட்சத்திர படைப்பாளி விருது” என்னும் புதிய விருது துறை சார்பில் உருவாக்கப்படும்.
82 நூலக உதவியாளர்கள் பணிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்படும்.” என சந்திர பிரியங்கா கூறினார்.