கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கி.மீ விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆன இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். அங்கிருந்து அவர் கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தார். இன்று கோவை ராஜ வீதியில் அவருக்கு கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணம் குறித்து சிவசூரியன் செந்தில் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது: புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் நான் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தில் இருந்து கோவைக்கு 1920 கி.மீ சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளேன். கடந்த ஆண்டு எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கி.மீ தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன். பசுமையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு செய்கிறேன். பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும். வருகிற 31ம் தேதி (வெள்ளி) அன்று கோவையிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.