சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும், அதிமுக பொதுச்
செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை மற்றும் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமி
இல்லத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பழனிசாமி, பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். என்னை ஒருமனதாகத் தேர்வு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பழனிசாமி தனது ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் பதிவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என இருந்ததை பொதுச்செயலாளர் என மாற்றியுள்ளார்.
முதல் அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி வெளியிட்ட முதல் அறிவிப்பில், “அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கட்சியின் சட்டதிட்ட விதிமுறைப்படி, கட்சியில்
உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வரும் 5-ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்படும். விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் கட்சி
தலைமை அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூறும்போது, “பழனிசாமி தலைமையில் அதிமுக மிகச்சிறப்பாக செயல்படு
வதற்கு இதுவே சாட்சி. இனிமேல், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை” என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறும்போது, “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாவால் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார் பழனிசாமி. அதிமுகவில் பழனிசாமி தலைமையில் ஒரே அணிதான் உள்ளது” என்றார்.அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தொண்டர் ஒருவர் 150 கிலோ லட்டு எடுத்து வந்தார். அதை கட்சியினருக்கு விநியோகித்த பழனிசாமி.