மாமல்லபுரம்: மேம்பால பணிக்காக அமைத்து, கிழிந்து தொங்கி கொண்டிருந்த தகரம் தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே 90 கிமீ தூரம் ரூ.1270 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, நேரங்களில் பூஞ்சேரி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் மேம்பால தூண்கள் மீது மோதி விபத்து ஏற்படாமல் விலகிச்செல்லும் வகையில், இரும்பு பைப் நட்டு அதனைச்சுற்றி தகரம் அமைக்கப்பட்டது.
மேலும், கிழிந்து தொங்கிய தகரம் ஆபத்து ஏற்படும் வகையில் காற்றில் பறந்த வண்ணம் இருந்தது. இதனால், தகரம் கிழித்து விபத்தில் சிக்குவோமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த வழியை கடந்து சென்று வந்தனர். இது குறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் நேற்று நேரில் வந்து கிழிந்து தொங்கிய தகரத்தை சீரமைத்தனர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.