சென்னை: முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், சென்னையில் கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுசார்பில், கோட்டை நோக்கி கோரிக்கை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,இப்பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், மத்திய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன், ஐஎன்டியுசி தலைவர் சேவியர், எச்எம்எஸ் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
56 ஆயிரம் காலி பணியிடங்கள்: தமிழ்நாடு மின்வாரியத்தில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்வாரியத்தில் தற்போது 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பி ஊழியர்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும்.
கடந்த 2018 பிப்.22-ம் தேதி ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறையில்வெளியாட்களைத் தேர்வு செய்யும்முறைக்கு விடக்கூடாது. ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்தும் முறைக்கு செல்லக் கூடாது.
இதன்மூலம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவைப் பறிக்க வேண்டாம். அரசாணை 100-ன்படி பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதிகாரிகளிடம் மனு: அதேபோல், கடந்த 2019-ம்ஆண்டு டிச.1-ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகள் 5 பேர் அடங்கிய குழு, சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தது.