புதுடில்லி, ‘நமீபியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் சிவிங்கி புலிகளில் ஒன்று, நேற்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது’ என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் சிவிங்கி புலி இனத்தை பெருக்குவதற்காக, ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகள், கடந்த ஆண்டு செப்., 17ல் வரவழைக்கப்பட்டன.
இவை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளன.
இவற்றில் பெண் சிவிங்கிப் புலிகளில் ஒன்று, நேற்று நான்கு குட்டிகளை ஈன்றெடுத்து உள்ளது. இத்தகவலை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் அவர், ‘நம் நாட்டில் சிவிங்கி புலி இனத்தை பெருக்குவதற்காக, பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை வெற்றி பெறச்செய்த வனத்துறை ஊழியர்களுக்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், ஒரு பெண் சிவிங்கிப் புலிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த சிவிங்கி புலி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement