கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளது.
இத்துடன் இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், ராகுல் காந்தி `நான் சாவர்க்கர் அல்ல, காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.
தற்போது ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வேன் எனக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல்கொடுத்த உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கூட, `சாவர்க்கர் எங்களின் கடவுள், ராகுல் காந்தி அப்படி பேசியது தவறு’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.