மும்பை: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், மோடி சமூகம் பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராகுலோ, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல’ என்றார்.
இதுகுறித்து சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர் தனிப்பட்ட முறையில் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் அவர்கள் வலியுறுத்த வேண்டும்.
உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கடுமையான வார்த்தைகளை பேசினர். அப்போதே, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.