விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் அமலன் சேவுகராஜ். இவர் அதேபகுதியில், கிளினிக் ஒன்று வைத்து நீண்டகாலமாக மருத்துவம் செய்து வந்தார்.
இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அவரிடம் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், அமலன் சேவுகராஜ் ஒரு போலி மருத்துவர். அவர் எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை என்றும், வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி, விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் அமலன் சேவுகராஜ் நடத்தி வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அமலன் சேவுகராஜ் கிளினிக்கில் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் அவர் பயன்படுத்திய மருந்து, ஊசி உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அமலன் சேவுகராஜ் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போலி மருத்துவர் அமலன் சேவுகராஜை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.