புதுடெல்லி,மார்ச்30: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.55,600 கோடியில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் அதிக நிதி பெற்றுள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியதாவது: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன் படி, வெளிநாட்டு நிதி பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனமும் வரவு செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 55,645.08 கோடி வெளிநாட்டு நிதி இந்திய என்ஜிஓக்களால் பெறப்பட்டுள்ளது. இந்த மூன்று நிதியாண்டுகளில் டெல்லிக்கு ரூ.14,062.77 கோடியும், கர்நாடகா ரூ.7,241.32 கோடியும், மகாராஷ்டிரா ரூ.5,606.01 கோடியும், தமிழ்நாடு ரூ.6,804.07 கோடியும் பெற்றுள்ளது. 2020ம் ஆண்டு முதல் இப்போது வரை சட்ட விதிகளை மீறியதற்காக 1,828 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2023 மார்ச் 10ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 16,383 என்ஜிஓக்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.