தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாகத் தோன்றும் திருவிளையாடல் காட்சி நான்காம் திருநாளான இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நெல்லையப்பரை வழிபட்டனர்.
நெல்லையப்பர் கோயிலின் தல புராணப்படி, முன்னொரு காலத்தில் ராமகோன் என்பவர் அரண்மனைக்குப் பால் கொண்டு செல்வாராம். அவர் பால் கொண்டு செல்லும்போது மூங்கில் காடுகளில் உள்ள ஓர் இடத்தில் இருந்த கல்லில் கால் இடறி விழுந்து பால் முழுவதும் கொட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து சில நாள்கள் அதே இடத்தில் இருந்த கல் இடறி பால் கொட்டிவது வழக்கமாயிற்று.
அரண்மனைக்குப் பால் கிடைக்காததால் கோபமடைந்த அரசன் ராமகோனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, நடந்த விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். தினமும் ஒரே இடத்தில் இருக்கும் கல்லில் கால் இடறியதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த அரசன், அந்தக் கல்லை அகற்றுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படிக் கல்லை அகற்ற அவர்கள் வெட்டியபோது அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது.
நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அரசன் பதறியபடி, சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கே சுயம்புவாக உதயமான நெல்லையப்பர் காட்சியளித்துள்ளார். தற்போதும் கூட மூலவரின் தலையில் சிறு வெட்டுக் காயம் இருப்பதைப் பார்க்க முடியும்.
இந்த வரலாற்றுத் திருவிளையாடல் நிகழ்வு, நெல்லையப்பர் கோயிலில் இன்று தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. கோயிலின் உள்பிராகாரத்தில் தாமிர சபா மண்டபம் அருகே உள்ள தல விருட்சமான மூங்கில் முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. பங்குனி உத்திர நான்காம் திருநாளான இன்று இரவு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா கண்டருளினர்.