சென்னை: தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்தப் பக்கத்துடன் ஃபேஸ்புக் பயனர்கள் உரையாடி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கங்களில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும், குழந்தை போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்துள்ளனர். மேலும், வியட்நாம் மொழியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்துடன் பயனர்கள் உரையாடி வருகின்றனர். குழந்தைகள் எழுத்தாளர் விழியன் (உமாநாத் செல்வன்) “உங்க ஊரில் சிறார் இலக்கியம் எல்லாம் எப்படி இருக்கு தம்பி?” என்று கேட்ட கேள்விக்கு வியட்நாமிஸ் மொழியில் ஹேக்கர்கள் பதில் அளித்துள்ளனர். மேலும் ஒரு சிலர், “உங்க ஊர்லயும் நிறைய ரயில் இருக்கா ப்ரோ?”, “ப்ரோ நீங்க எந்த ஊரு, சாப்டீங்களா?” என்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை மீட்கும் நடவடிக்கையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.