2023 ஐபிஎல் தொடர், மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்கிடையில், ஆஸ்திரேலியா உடனான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7, 2023 அன்று நடக்கவுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆனால், இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஐபிஎல் தொடரில் விளையாடிச் சோர்ந்துபோன இந்திய வீரர்களால் உடனே எப்படி அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தயாராக முடியும், இது அவர்களுக்கு மிகுந்தப் பணிச்சுமையாக இருக்கும் என்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இது இன்னும் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இவை தவிர, ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடிச் சோர்ந்து போவதால் அவர்களால் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிவில்லை என்ற விமர்சனத்தை நீண்ட காலமாகப் பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தச் சிக்கலான சூழலை எப்படிக் கையாண்டு சர்வதேச போட்டிக்கு இந்திய அணி தயாராகப்போகிறது என்பது பற்றிப் பேசியிருந்த ரோஹித் சர்மா, “ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளில் பங்கேற்காத இந்திய டெஸ்ட் அணியின் வீரர்களை, சீக்கிரம் இங்கிலாந்துக்கு அனுப்பிவிடுவோம். மேலும், அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்போம்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தற்போது ரோஹித், “இப்போது ஐபிஎல்-லில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவர்கள் அணியின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களின் அணிகளுக்குச் சில அறிவுரைகளைக் கொடுத்துள்ளோம். இருப்பினும், வீரர்கள் அனைவரும் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தாங்களாகவே தங்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை, அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அதைமீறி அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் அல்லது பணிச்சுமை இருக்கிறது என்றால் அவர்களாக முன்வந்து பேசலாம், ஓரிரு ஆட்டங்களில் ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் ஓரிரு ஆட்டங்களில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்றும் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.
இது குறித்தும் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த ரோஹித், “நான் ஓய்வெடுப்பதைப் பற்றி மார்க் பவுச்சர் கூறுவார்” என்று கூறினார்.
இதற்கு விளக்கமளித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மார்க் பவுச்சர், “ரோஹித் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டவர், “ரோஹித் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் ஓய்வெடுக்க விரும்பமாட்டார் என்று நம்புகிறேன். ஆனால், சூழ்நிலைகள் எப்போது ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு கேப்டனாகவும், அணியின் வீரராகவும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒருவேளை அவர் ஓரிரு ஆட்டங்களில் ஓய்வெடுக்க விரும்பினால் அதற்கு அனுமதி வழங்குவேன். அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது” என்று கூறியுள்ளார்.