சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என கூறி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில் ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மட்டும், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகர் ஆகியோர் தரப்பில் தாங்களும் மேல்முறையீடு செய்து இருப்பதாகவும், தங்களது மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்பதால் ஓபிஎஸ் வழக்குடன் தங்களது வழக்கையும் சேர்த்து மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், அந்த மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தனர். பின்னர் ஓபிஎஸ் உட்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஒன்றாக இன்று (மார்ச் 30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.