சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் போஜ்புரி நடிகை தன் அறையில் தனியாக தங்கியிருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு நடிகையின் காதலன் தான் காரணம் என்று நடிகையின் தாயார் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே மும்பையிலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கும் நடிகையின் காதலன் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
தற்போது ஒடிசாவிலும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஒடிசாவில் ஏராளமான ஆல்பங்களை வெளியிட்டு இருப்பவர் ருச்சிஸ்மிதா. பாடகியான இவர் ஒடிசா படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் ஒடிசாவில் உள்ள பாலங்கிர் என்ற இடத்தில் தன் தாயாருடன் வசித்து வந்தார். இந்த வீடு அவரின் உறவினருக்கு சொந்தமானது ஆகும். இவர் தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகையின் தாயார் இது குறித்து, “என் மகள் என்னிடம் உருளைக்கிழங்கு பரோட்டா செய்து கொடுக்கும்படி கேட்டார். இது தொடர்பாக என்னுடன் சண்டை போட்டுக்கொண்டு, தன் அறைக்குச் சென்றார். இதற்கு முன்பும் என் மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ருச்சிஸ்மிதா வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அது தொடர்பாக அவரின் குடும்பத்துக்கும், நடிகைக்கும் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதில் யார் சொல்வது உண்மை என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தற்கொலை தொடர்பாக ருச்சிஸ்மிதாவின் குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.