அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசு அடிப்படை சுங்க வரியில் விலக்கு அளித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை 2021 – ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் பொது விலக்கு அறிவிப்பின் மூலம் நிவாரணம் கிடைக்கும் இந்த வரி விலக்கை பெறலாம். இதற்கு, ஒரு தனிப்பட்ட இறக்குமதியாளர் மத்திய அல்லது மாநில சுகாதாரப்பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட மருத்துவ அலுவலர் அல்லது மாவட்டத்தின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
10 கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு, சில அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆண்டு செலவு, ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தையின் எடையை பொறுத்து மருந்து எடுத்துக்கொள்வதன் அளவு அதிகரிக்கும். இந்த வரி விலக்கு மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு கணிசமான செலவு மிச்சமாகும், மற்றும் நோயாளிக்கு தேவையான நிவாரணமும் கிடைக்கும்.
அதேபோல், பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (pembrolizumab) மருந்துக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதுகெலும்பு தசைச் சிதைவு அல்லது டச்சேன் தசைநார் சிதைவுக்கான சிகிச்சைக்கான குறிப்பிட்ட மருந்துகளுக்கு ஏற்கெனவே விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு கோரி பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தததையடுத்து இந்த வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.