சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள்தேர்வில் 2.54 லட்சம் பேர் பங்கேற்றதில் 6 சதவீத பட்டதாரிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல்தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 53,023 பேர் எழுதினர். அதன் முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 பேர் (14%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதைத் தொடர்ந்து டெட் 2-ம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15-ம் தேதிவரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2 லட்சத்து 54,224 பேர் மட்டுமே எழுதினர். இவர்களுக்கான முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியானது.
டெட் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீதம், மற்ற பிரிவினர் 55 சதவீதமும் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதன்படி தேர்வெழுதியதில் மொத்தம் 15,435 (6%) பட்டதாரிகள் மட்டுமேதேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் உட்படபாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்கூட எடுக்க முடியாமல் 94% பட்டதாரிகள் தோல்வி அடைந்திருப்பது பெரும் பேசுப்பொருளாகியுள்ளது. எனினும், இந்த விகிதம் முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகும். அதாவது, 2017-ல் 3.63 சதவீதம்,2019-ல் 0.8 சதவீதம் என்ற அளவிலேயே டெட் 2-ம் தாள் தேர்வில் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.