தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: அரசாங்கத்தின் சிறுசேமிப்பு திட்டங்களான பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்றவற்றிலும் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, அனைத்து வங்கிகளும் தங்களின் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் அரசு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேமிப்பு திட்டத்தில் வட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சிறுசேமிப்புத் திட்டத்திற்கான வட்டி மார்ச் 31-ஆம் தேதி அரசால் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் பின்னர் அதை அதிகரிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். அதன்படி இம்முறை பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் தொடர்பான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் வரும் காலாண்டில் மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட்டி விகிதத்தை உயர்த்துவது அவசியம்
தற்போதைய சந்தை நிலவரங்களைப் பார்க்கும்போது, வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதனால்தான் இந்த முறை பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதத்தை திருத்துவது பற்றி பேசப்படுகிறது. கடந்த 2021-22 நிதியாண்டின் தொடக்கத்தில், சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் சிலர் திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனிடையே சமீபத்தில், EPFO தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 அன்று வட்டி மதிப்பாய்வு செய்யப்படும்
இந்த நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மார்ச் 31-ம் தேதி மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் சார்பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பெறப்படும் வட்டி விகிதம் அறிவிக்கப்படும், மேலும் இந்த வட்டி விகிதத்தை 10-20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்தார். இதற்குப் பிறகு, இப்போது PPF, NSC மற்றும் சுகன்யா சம்ரித்தி ஆகியவற்றில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதற்கிடையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. மேலும் தற்போது, PPFக்கு ஆண்டுக்கு 7.1% வீதத்திலும், சுகன்யா சம்ரித்திக்கு 7.6% வீதத்திலும் வட்டி தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.