மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முக்கிய பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கூட்டத்தின் போது எழுந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதிருப்தியில் குறுக்கிட்டு தடுத்த தி.மு.க கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலின் புகழை உரக்கப் பேசி கவனத்தை திசை திருப்பினர்.
மேலும் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் அமளியில் ஈடுபட்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க விடாமல் தடுத்தனர். இந்த நிகழ்வால் நகர் மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட ஊட்டி நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.