புதுடெல்லி: கரோனா பரவல் காலத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போதும், சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் ஏராளமானோர் நாடு திரும்பினர். அவர்கள் மருத்துவ படிப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் அவர்கள் சேர்ந்து தங்கள் பட்டப் படிப்பை முடிக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மருத்துவப் படிப்பும், வாழ்க்கையும் வீணாக கூடாது என்பதை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், அவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து மருத்துவத் தொழிலை தொடர மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தீர்வு காண வேண்டும் என கடந்தாண்டு பரிந்துரை செய்தது.
இப்பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க, நிபுணர்குழுவை அமைத்து மாணவர்களின் நலனை மத்திய அரசு காக்க வேண்டும் என்றும் கூறியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், இந்த மாணவர்களின் வேலை பாதிக்கப்படும், இவர்களின் மருத்துவ கல்விக்காக, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்த பெற்றோர் சிரமபடுவர். எனவே, இந்த மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை நிறைவு செய்வதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்தியஅரசின் பதில் மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஐஸ்வர்யா கூறியதாவது: சீனா மற்றும் உக்ரைனில் மருத்துவம் படித்து தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை முடித்து தேர்ச்சி பெற்று மருத்துவ தொழிலை தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த மாணவர்கள், இங்குள்ள பாடத்திட்டத்தின் படி எம்பிபிஎஸ் இறுதி தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின் இரண்டாண்டு உள்ளிருப்பு பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு சொலிசிடர் ஜெனரல் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரே வாய்ப்பில் எம்பிபிஎஸ் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை மாற்றி, இரண்டு வாய்ப்புகளில் எம்பிபிஎஸ் இறுதி தேர்வை எழுத அனுமதிக்கும்படி உத்தரவிட்டனர்.