உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் கூலிப்படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என்று பிரித்தானியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி
ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட மேற்கத்திய நாடுகள் கூடுதல் ராணுவ உதவியை வழங்க வேண்டும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை முன்வைத்து வருகிறார்.
அதனடிப்படையில் ஜேர்மனி, போலந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இராணுவ ஆயுத உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் 14 சேலஞ்சர் 2 முக்கிய போர் டாங்கிகளை உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கியுள்ளது, இதனை பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே சமயம் உக்ரைனிய படைகள் வழங்கப்பட்ட டாங்கிகளை கொண்டு நோட்டோ முறையில் அல்லது மேற்கத்திய நாடுகளின் வழியில் சண்டை பயிற்சி பெற வேண்டும் என்று பென் வாலஸ் தெரிவித்தார்.
அத்துடன், போர் எப்போது, எங்கு அல்லது எப்படி நிகழலாம் என்பதை கணிக்க முடியாது, ஆனால் தாக்குதலில் ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்கான செயல்முறையை தொடங்க உக்ரைன் ஆர்வமாக உள்ளது என்பதில் ரகசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
2,20,000 வீரர்கள் பாதிப்பு
இதற்கிடையில் 2,20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் கூலிப்படையினர் இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்து அல்லது காயமடைந்து இருக்கலாம் என்று சமீபத்திய அமெரிக்க மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பிப்ரவரியில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய போர் வீரர்கள் மற்றும் அவர்களின் தனியார் கூலிப்படையை சேர்ந்த 1,75,000 முதல் 2,00,000 பேர் வரை தாக்குதலில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்து இருந்தது.
அதில் 40,000, முதல் 60,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
sky news