உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது..
முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் டிரைலர் எதிர்பார்த்ததை விடவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில்தான் கதை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு பக்கம் அருண்மொழி வர்மன் இறந்ததாக வந்த செய்தியுடனும், மந்தாகினி யார் என்ற சஸ்பென்ஸுடனும் முதல் பாகம் முடிவடைந்தது.
இரண்டாம் பாகத்தில் சோழ தேசத்தில் நடக்கும் அரசியல் ஆட்டம், நந்தினியின் பழி வாங்கும் படலம், தங்களது நாட்டைக் காப்பாற்ற ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன், குந்தவை ஆகியோர் போராடுவது என இரண்டாம் பாகம் நகரும்.
3 நிமிடங்கள் 34 வினாடிகள் ஓடும் இரண்டாம் பாக டிரைலர் முதல் பாக முடிவிலிருந்து ஆரம்பமாகிறது. பெரிய பழுவேட்டரையரின் அரசியல் சதி, பாண்டிய ஆபத்துதவிகளின் சபதம், போர்க்களக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், அருண்மொழி வர்மன் மீண்டும் வருவது, மந்தாகினி பற்றிய ரகசியத்தை சோழரிடம் குந்தவை கேட்பது, நந்தினியின் பழி வாங்கும் கோபம், மதுராந்தகனின் பதவி ஆசை உள்ளிட்ட பலவும் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொருவருக்குமே முக்கியத்துவமான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது என டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது. நடிப்பில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
ஏஆர் ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு முதல் பாகத்தை விடவும் மிரட்டலாய் இருக்கப் போகிறது என்பது தெரிகிறது.
டிரைலரின் கடைசியில் நந்தினியும், ஆதித்த கரிகாலனும் நேருக்கு நேர் சந்திக்கும் அந்தக் காட்சி டிரைலரின் ஹைலைட் மட்டுமல்ல, படத்தின் ஹைலைட், நாவலின் ஹைலைட்….
இன்னும் ஒரு மாதம் எப்படி காத்திருக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்.