சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றம்). இவரின் குழந்தைகளை சுரேஷ் என்கிற அப்பு என்பவர் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சுரேஷின் நடவடிக்கைகள் சரியில்லாததால் வேறு ஆட்டோவில் குழந்தைகளைப் பள்ளிக்கு சித்ரா அனுப்பி வைத்தார். அதனால் சித்ராவிடம் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 27.3.23-ம் தேதி இரவு சித்ரா, வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டதோடு, அவரின் கையைப் பிடித்து இழுத்தார். அதனால் சித்ரா சத்தம் போட்டார்.
அப்போது, `நீ ஏன் என்னிடம் பேசவில்லை என்றால், உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று சித்ராவை சுரேஷ் மிரட்டிச் சென்றார். இது குறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சித்ரா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சுரேஷிடம் விசாரித்தனர். விசாரணையில் சித்ராவிடம் அநாகரிகமாக சரேஷ் நடந்தது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.