புதுடில்லி, ‘யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளத்தில்
‘ப்ரீபெய்டு வாலட்’ வாயிலாக மேற்கொள்ளப்படும் வணிக ரீதியான பணப்
பரிவர்த்தனைகளுக்கு, வரும் ஏப்., 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்
என்றும், வழக்கமாக மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளுக்கு
கட்டணம் வசூலிக்கப்படாது’ என்றும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம்
அறிவித்துள்ளது.
நாட்டில், ‘டிஜிட்டல்’ வாயிலான பணப் பரிவர்த்தனைகளில், யு.பி.ஐ., முக்கிய பங்கு வகிக்கிறது.
‘கூகுள் பே, போன் பே, பேடி எம்’ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக, தினமும் பல லட்சக்கணக்கான, யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளை பொது மக்கள் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், ‘ப்ரீ பெய்டு வாலட்’ வாயிலாக, 2,000 ரூபாய்க்கு மேல், வணிக ரீதியிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு, வரும் ஏப்., 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்’ என, தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பெட்ரோல், டீசல் ‘பங்க்’குகளுக்கு யு.பி.ஐ., வழியாக பணம் செலுத்தும் போது 0.5 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். தொலைதொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் போன்றவற்றிக்கு 0.7 சதவீதமும், பல்பொருள் அங்காடிக்கு 0.9 சதவீதமும், மியூச்சுவல் பண்ட், அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு 1 சதவீதமும் இந்நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
யு.பி.ஐ., வாயிலாக, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
மாறாக, ஒரு நபர், ப்ரீபெய்டு வாலட் உள்ளிட்ட முன்னதாகவே பண இருப்பு உள்ள வசதியின் வாயிலாக 2,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போது மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணம் வணிக நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும்; வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர் கள் குழப்பம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யு.பி.ஐ., பரிவர்த்தனை
‘ரூபே கிரெடிட் கார்டு’களை, யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனை உடன் இணைக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பாரத் பே, கூகுள் பே, பேடி எம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி, யு.பி.ஐ., பரிவர்த்தனையை மேற்கொள்ள, தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்துடன் கூட்டு வைத்துள்ளன. இதன் வாயிலாக, கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த பரிவர்த்தனைகளுக்கு ‘டெபிட் கார்டு’ தேவைப்படாததைப் போலவே, நுகர்வோர் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூபே கிரெடிட் கார்டை எடுத்துச் செல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த முயற்சி, குறுகிய கால கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளால் வழங்கப்படும் வெகுமதிகளின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.