புதுடில்லி, ‘ஸ்விக்கி’ உணவு சேவை செயலி வாயிலாக, ஓராண்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான இட்லிகளை ஒரே நபர், ‘ஆர்டர்’ செய்து வாங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக இட்லி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை, ‘ஸ்விக்கி’ உணவு சேவை நிறுவனம் நேற்று வெளியிட்டது.
அதன் விபரம்:
இந்த ஆய்வு, 2022 மார்ச் 30 முதல், 2023 மார்ச் 25 வரை நடத்தப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில், ஸ்விக்கி நிறுவனம் 3.30 கோடி, ‘பிளேட்’ இட்லிகளை வீடுகளுக்கு, ‘டெலிவரி’ செய்துள்ளது.
இதில், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்கள் முதல் மூன்று இடங்களை பெறுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக புதுடில்லி, கோல்கட்டா, கொச்சி, மும்பை, கோவை, புனே, விசாகப்பட்டினம் ஆகிய இடங்கள் அதிகப்படியான இட்லிகளை ஆர்டர் செய்துள்ளன.
இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதை சேர்ந்த ஒரே நபர், கடந்த ஓராண்டில் 6 லட்சம் ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளார். மொத்தம் 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்துள்ளார்.
தனக்கு மட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்களுக்கும், அடிக்கடி பெங்களூரு மற்றும் சென்னைக்கு ரயிலில் செல்லும் போதும் இட்லி ஆர்டர் செய்துள்ளார்.
தினமும் காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை தான் இட்லி அதிக அளவில் விற்பனையாகின்றன. பெங்களூரு நகரில் மட்டும் ரவா இட்லி அதிகம் விற்பனையாகின்றன.
ஸ்விக்கி செயலியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட காலை உணவு பட்டியலில் மசால் தோசைக்கு பின் இட்லி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.