* நலிவின் பிடியில் சிக்கியுள்ளதாக குமுறல்
* ஒன்றிய அரசின் சலுகைகள் அவசியம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் மையம் கொண்டு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரிக் இயந்திர வண்டித்தொழில் நலிவின் பிடியில் சிக்கியுள்ளது. இதனை மீட்டெடுக்க ஒன்றிய அரசின் சலுகைககள் அவசியம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். வைத்துள்ளனர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது சான்றோர் வாக்கு. இந்த நீரானது பண்டை காலங்களில் ஆறுகள், குளங்கள், ஏரிகள் ேபான்ற பொது நீர்நிலைகளில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டது. இதேபோல் ஊருக்கு மத்தியில் பொதுக்கிணறுகளும் தோண்டப்பட்டது. இதன்பிறகு அவரவருக்கு சொந்தமான நிலங்களிலேயே பொதுமக்கள், கிணறுகளை தோண்ட ஆரம்பித்தனர். இவ்வாறு கிணறுகளை தோண்டுவதற்கு 20முதல் 30பேர் வரை, பல மாதங்கள் வேலை செய்யவேண்டும்.
நிலத்தை ஆழமாக தோண்டி, பாறைகளை வெடி வைத்து தகர்த்து கிணறுகளை உருவாக்கினார்கள். அதேநேரத்தில் திறந்த வெளிக்கிணற்றில் இருக்கும் நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்ற எண்ணஓட்டமும் மக்களிடம் உருவானது. இதற்கு தீர்வு காணும் வகையில் இயந்திரங்கள் மூலம் கிணறு தோண்டும் முறை தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. அழுத்தப்பட்ட காற்றின் மூலம் இயந்திரங்களை இயக்கி கிணறு தோண்டுவதே இதன் சிறப்பம்சம். இந்த முறையால் ஒரே நாளில் ஆழ்துளை கிணறு அமைக்க முடியும். மேலும் 2,500 அடி ஆழம் கூட தோண்ட முடியும்.
இந்த நீர் குடிப்பதற்கும் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தவகையில் தற்போது பூமிக்கடியில் இருக்கும் நீரை வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்து வழங்கும் பணியை செய்வது ரிக் இயந்திரங்கள். இந்தியாவில் ரிக் இயந்திரவண்டிகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வட்டாரத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ரிக்வண்டிகள் உள்ளன. மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் ரிக் வண்டிகள் உள்ளன. தமிழ்நாட்டு ரிக்குகள் இங்கு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
படிப்பை முடித்து வேலையின்றி இருந்த ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த தொழில் வரப்பிரசாதமாக அமைந்தது. அரசின் ஆதரவின்றி சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்து பொருளாதார முன்னேற்றத்தை அளித்தது. இப்படி செழிப்புக்கு வழிகாட்டிய ரிக் வண்டித் தொழில் தற்போது பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக ரிக் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில ரிக் உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவருமான லட்சுமணன், செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தற்போது ரிக் இயந்திரத்தொழில் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலையில் உள்ளது. ஒரு போர்வெல் வாகனம் புதிதாக வாங்க ₹1.75 கோடி செலவாகும்.
வாகனத்திற்கு சுமார் 10 முதல் 15 பேர் வீதம் வேலை செய்து வருகிறார்கள். இதில் போர்வெல் டிரில்லர், டிரைவர், மேலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை தவிர்த்து மற்ற பணிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த போர்வெல் தொழில் முற்றிலுமாக முடங்கி போனது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக போர்வெல் அமைப்பதற்கு வடமாநிலங்களில் இருந்தும், தென் மாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் இல்லை. இதனால் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலையில்லாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உறைவிடம் கொடுத்தும் உணவு கொடுத்தும் அந்தந்த பகுதிகளில் பாதுகாத்து வருகிறோம். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ₹65க்கு விற்ற டீசல் தற்போது ₹96 வரை விலை உயர்ந்து விட்டது. ஆனால் டிரில்லிங் ரேட் உயரவில்லை. இதனிடையே போர்வெல் அமைக்கும் போது 18 சதவீத ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதன் காரணமாகவும் தொழில் நலிவடையும் நிலை உண்டானது. விவசாயிகளிடம் ஜிஎஸ்டியை கேட்டு வாங்கமுடியாது. அதனை ரிக் வண்டி உரிமையாளரே கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயில் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு, டயர், ராடு, ஹேமர் விலை உயர்வு, சம்பள உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிக் உரிமையாளர்கள், தங்கள் தவணைத் தொகையை கூட செலுத்த இயலாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும் ரிக் வண்டிகளை ஆர்சியில் பதிவு செய்யும் போது 25 டன் மட்டுமே என்று பதிவு செய்கின்றனர். ஆனால் 32டன் வரை கூட எடை வருகிறது. ஆகவே 32டன் வரை பதிவு செய்து தரவேண்டும். வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது இது உதவியாக இருக்கும். ரிக் தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு ஜிஎஸ்டியை முற்றிலும் நீக்க வேண்டும். அல்லது மிகக்குறைவாக 5 சதவீதம் விதிக்கலாம்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். அல்லது ரிக் தொழிலுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் ரிக் தொழிலில் அதிகளவில் உள்ளனர். அவர்கள் டிரில்லிங் ரேட்டை குறைத்து வாங்குவதாலும் தொழில் வாய்ப்புகள் குறைந்து வருகிறது. தொழிலாளர்களும் முன் பணம் வாங்கிவிட்டு வேலைக்கு வருவதில்லை. இதனையும் நாங்கள் சமாளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ரிக் வண்டிகளுக்கு ஒரே சாலை வரி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது போக்குவரத்து துறையாலும், காவல்துறையாலும் ஏற்படும் தொல்லைகள் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசம் கடந்து சென்ற தொழில்
‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்ற முதுமொழிக்கேற்ப, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பரவலாக ரிக் வண்டிகளை இயக்கி வருகின்றனர். கென்யா, காமரூன், மொசாம்பிக், ஜிம்பாப்வே, சூடான், கானா ஆகிய இடங்களில் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200 ரிக் இயந்திர வண்டிகள் அங்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா மட்டுமின்றி மலேஷியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ரிக் வண்டிகள் உள்ளன. அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ரிக்வண்டிகள் உள்ளன.
* ரிக் தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு ஜிஎஸ்டியை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
* ஆப்பிரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா, வியட்நாம், லாவோஸ் நாடுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.