காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடியை குறித்து விமர்சித்த வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், டெல்லியில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. இவை அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று குமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமூகத்திற்கான பொதுச் சுடுகாட்டிற்கு சென்றனர்.
அப்போது அவர்கள் கையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் கொண்டு சென்று அங்கு மொட்டை போட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.