நாக்பூர்: “சத்ரபதி சம்பாஜிநகர் என அழைக்கப்படும் அவுரங்காபாத் நகரில் காவல் துறையினர் தாக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தலைவர்கள் அதற்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்துள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அங்கு அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், சிலர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு சூழ்நிலையை சீர்குலைக்க முயல்கின்றனர்.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி தவறான அறிக்கைகளைத் தருபவர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். யாராவது இந்தச் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூச நினைத்தால் அது துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் புகழ்பெற்ற ராமர் கோயிலில் வியாழக்கிழமை ராமநவமி கொண்டாட அதிக அளவிலான கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ராமநவமிக்கு முந்தைநாள் நேற்று (புதன்கிழமை) இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 500-க்கும் அதிகமானோர் அங்கிருந்த காவலர்களையும் தாக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் ஏழு போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன என்றும் போலீஸார் தெரிவித்தனர்.