கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,000, 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும், தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்துமாறும் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றூம் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதரத்துறை அமைச்சகம் சுட்டிகாட்டியது.
3 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு
இந்த சூழலில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் குறிப்பின்படி, இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,375 ஆக இருந்த நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு தற்போது 3 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரவல் விகிதம் 40% ஆக உயர்வு
முந்தைய நாளை ஒப்பிடுகையில் 40% அளவுக்கு கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். அதைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,509 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோ கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2 பேர் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர்.
அதன்படி இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,12,692. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 4,41,68,321 பேர் ஆவர்.
ஒரு லட்சம் சோதனைகள்
தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம்.கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.73% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71%. இதுவரை மொத்தம் 92.14 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,10,522 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: பாஜக மாஸ்டர் பிளான்… காங்கிரஸ் அவ்வளவு தான்!
அதேபோல் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 15,784 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.