சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியாணாவைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் உள்ளிட்ட சிலர் சேர்ந்து கடுமையாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷிமல்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் ஜஸ்விந்தர் சிங் மீது மேலும் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ஜஸ்விந்தர் சிங் ஜாமீன் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் சித்காரா, குற்றத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஆனால் இந்த வழக்கை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான (ஏஐ) சாட்ஜிபிடியின் உதவியை நாடியது தெரிய வந்துள்ளது. அதேநேரம், சாட்ஜிபிடியில் பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
நீதிமன்றம் சார்பில் முன்வைத்த கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்தபதிலில், “கொடூரமாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மீதான நீதி நடைமுறை யானது, வழக்கின் குறிப்பிட்ட சூழ்நிலை மற்றும் விசாரிக்கப்படும் அதிகார வரம்பில் உள்ள சட்டங்களைப் பொறுத்தது. எனினும், கொலை, கடுமையான தாக்குதல், சித்ரவதை உள்ளிட்ட கொடும் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அவர்களை சமூகத்துக்கு ஆபத்தானவர்கள் என கருதலாம்” என கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஏ.ஐ.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகளை மொழி பெயர்க்கும் பணி, சோதனை முறையில் ஏஐ வசம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக, கொலம்பியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், ஆட்டிஸம் குறைபாடு கொண்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை உரிமை தொடர்பான வழக்கில் சாட்ஜிபிடி உதவியுடன் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
30 கோடி பேர் வேலை பறிபோகும் அபாயம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ற பெயரில் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில், “ஏஐ தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் 30 கோடி முழு நேர ஊழியர்கள் வேலையிழப்பார்கள். நிர்வாக துறை (46%) மற்றும் நீதித் துறை (44%) பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். அதேநேரம், ஏஐ தொழில்நுட்பத் துறையில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.