இந்துார், மத்திய பிரதேசத்தில் ராம நவமி வழிபாட்டின் போது, கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்ததில், 13 பேர் பலியாகினர்; 19 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில், பழமையான பேலேஷ்வர் மஹாதேவ் கோவில் உள்ளது.
இங்கு, ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி, நேற்று ஏராளமானோர் வழிபாட்டிற்காக வந்திருந்தனர். கோவிலின் உள்ளே இருந்த தரைக்கிணறு, இரும்பு கம்பியால் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் 30க்கும் மேற்பட்டோர் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பாரம் தாங்காமல் இந்த இரும்பு மூடி சரிந்து விழுந்தது. இதன்மேலே நின்றிருந்த 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.
பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றில் இருந்து 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், ”எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் பலர் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது.
”பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா, ௫ லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ௫௦ ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப் படும்,” என்றார்.