மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள கோவில் கிணற்றின் தளம் இடிந்து விழுந்து, மூழ்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராம நவமி திருவிழா
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று ராம நவமி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது கோவிலில் உள்ள கிணற்றின் தளம் மூழ்கியதில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தூரின் சினே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ பாலேஷ்வர் கோவில் உள்ளது. ராம நவமி என்பதால் ஏராளமானவர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
கோவிலுக்குள் இருந்த கிணற்றின் மீது பலரும் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எடை தாங்காமல் கிணற்றின் கூரை உள் வாங்கியுள்ளது.
இதில், கிணற்றின் மீது நின்று கொண்டு இருந்தவர்கள் அப்படியே கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த சம்பவம் இந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் உயிரிழப்பு
கோவில் கிணற்றுக்குள் மொத்தம் 21 பேர் சிக்கி இருந்ததாக தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறை மற்றும் உள்ளூர் ஆட்கள் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் இறங்கினர். இதில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்து, 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
8 devotees, including two children rescued so far. 10-15 devotees could still be trapped inside the collapsed structure. #Indore @makarandkale pic.twitter.com/yDrsxk2z4Q
— Utkarsh Singh (@utkarshs88) March 30, 2023
இந்தூர் எம்பி சங்கர் லால்வானி கூறுகையில், “விபத்து நடந்த இடத்தில் நிர்வாக குழுக்கள் உள்ளன. சிக்கியவர்களை மீட்பதே எங்களது முன்னுரிமை. கோவில் மிகவும் பழமையானது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,
”இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சிவராஜ் சௌஹானிடம் பேசி, நிலைமையை புதுப்பித்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.