Tripura BJP MLA Watching Porn In Assembly: திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஜதாப் லால் நாத், 2018ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இவர் 2018 சட்டப்பேரவை தேர்தலில், சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டார்.
மேலும், இவர் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். இந்தமுறை, திரிபுராவின் வடக்கு மாவட்டத்தின் பாக்பாசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இதனை அடுத்து, திரிபுரா சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27) பாஜக எம்எல்ஏ ஜதப் லால் நாத், பேரவைக்குள் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏ ஆபாசபடத்தை பார்க்கும் வீடியோ நேற்று நள்ளிரவில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது வைரலாகும் வீடியோவில், அவர் டேப்லெட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார். அதில், ஆபாச படம் தெரிவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடந்துகொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுபோன்ற செயல்களைச் செய்வது மிகவும் ‘வெட்கக்கேடானது’ என்றும் கருத்து தெகிவிக்கின்றனர். ஆனால், இதுவரை திரிபுரா சட்டசபை சபாநாயகர் பிஸ்வா பந்து சென் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
பாஜக எம்எல்ஏ ஒருவர் பொது இடத்தில் ஆபாசத்தைப் பார்த்து பிடிபடுவது இது முதல் முறையல்ல. 2012ஆம் ஆண்டில், கர்நாடகாவின் இரண்டு அமைச்சர்கள் மாநில சட்டசபைக்குள் தங்கள் தொலைபேசிகளில் ஆபாச காட்சிகளைப் பார்த்ததால் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைச்சர்கள், லக்ஷ்மண் சவாதி மற்றும் சிசி பாட்டீல் ஆகியோர் விசாரணையில் எந்த தவறும் செய்யவில்லை என்று பின்னர் கட்சியால் மீண்டும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.