சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆகியுள்ளார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க்.
ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் மஸ்க். அவர் இந்த தளத்தில் பேசாத டாபிக் இல்லை. சமயங்களில் மற்ற பயனர்களின் ட்வீட்களுக்கும் பதில் கொடுப்பார். அதன் காரணமாக தற்போது சுமார் 13,30,98,701 ஃபாலோயர்களை கொண்டுள்ளார் மஸ்க். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் 100 மில்லியன் ஃபாலோயர்களை மஸ்க் பெற்றார். மறுபுறம் ஒபாமா சுமார் 13,30,41,441 கொண்டுள்ளார். பெரும்பாலும் ப்ரொபஷனலாக மட்டுமே ட்விட்டர் தளத்தை அவர் பயன்படுத்துவார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். ப்ளூ டிக் கட்டண சந்தா முறை தொடங்கி பல மாற்றங்கள் இதில் அடங்கும். தளத்தில் தொழில்நுட்ப மாதிரியான அம்சங்கள் மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.