சென்னை: தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் டெலி மெடிசின் மூலம் உயர்மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 2,227 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புறங்களில் மட்டும் 1,800 உள்ளன. கிராமப்புற மக்கள்பெரும்பாலும் மருத்துவ தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். அருகில் மாவட்ட தலைமை மருத்துவமனையோ, மருத்துவக் கல்லூரிமருத்துவமனையோ இல்லாதபட்சத்தில், அவர்களுக்கு உயர் சிகிச்சைகள், முக்கிய மருத்துவ ஆலோசனைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், பின்தங்கிய பகுதிகளில் உயர் சிறப்பு மருத்துவ சேவைகளை தொலைநிலை (டெலி மெடிசின்) முறையில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம், சூளகிரி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இணையதளம் மூலம்ஒருங்கிணைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:
தொலை தொடர்பு சேவை இல்லாத கிராமங்களுக்கு அத்தகையவசதியை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை இணைய சேவை நிறுவனம் (டேன்ஃபிநெட்) தொடங்கப்பட்டது. அதன் சார்பில் மலைப் பகுதிகளிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் இணையசேவை வழங்கப்பட்டு வருகிறது.அதை பயன்படுத்தி, அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவசேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்துறை சார்ந்த மருத்துவர்கள், தொலைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கான தொலைநிலை சாதனத்தை டேன்ஃபிநெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
முதல்கட்டமாக, அதை பரிசோதனை முறையில் செயல்படுத்தி ஆய்வு செய்து வருகிறோம். தடையின்றி இணைய சேவை கிடைக்கிறதா, தொலைநிலை முறையில் மருத்துவர்களை நோயாளிகள் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறதா, அதன்மூலம் மருத்துவ சிகிச்சைகளை வழங்க முடிகிறதா என்று ஆய்வு நடந்து வருகிறது. மேற்கண்ட 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு, மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.